யாகவா முனிவர் - “ஆன்மீகவாதி' என ஒற்றை சொல்லில் அடக்க முடியாத ஆன்மீக,
தெய்வீக பேராற்றல் கொண்ட இமயம். மெய்ஞான மணத்தை பூமி எங்கும் பரப்ப வந்த அற்புத
பிறவி. இவர் பிறந்தது 02.03.1941 ஆம் ஆண்டு இந்தியாவில், தமிழ்நாட்டில், நெல்லை
மாவட்டம், திருச்செந்தூர், தாமிரபரணி ஆற்றோரம், அம்மன்புரம் என்ற சிறிய கிராமத்தில்,
எளிமையான விவசாய குடும்பத்தில், இலக்குமணன் நாடார், இசக்கி அம்மையார், தம்பதியருக்கு,
இரட்டையரில் இளையவராக அவதரிக்கிறார். இது இவரது 54ஆம் பிறவி. இவர் இயற்பெயர்
லெட்சுமணன் 'யாகவா' என்பது இவர் பிரபஞ்ச பெயராகும். யா- என்றால் காற்று, ௧- என்றால்
நீர், வா - என்றால் நட்சத்திரம். காற்று நீர் நட்சத்திரம் இதன் கலவையே யாகவா. யாகவா
இல்லையேல் அண்டசராசரம் இல்லை. யாகவா இல்லையேல் எதுவும் அசையாது, அனைத்து
உயிர்க்கும் மூலப்பொருள், பரம்பொருள் யாகவா. இவரது இளமைக்காலம் கடுமையான
வறுமையில் கழிகிறது. சொல்ல முடியாத துயரம் இளமையில், ஏழ்மையை அனுபவித்த போதிலும்
உழைத்து முன்னேறிய உத்தமர். பிச்சை எடுத்து, ஆடு மாடு மேய்த்து, இடுகாடு காத்து, விறகு
வெட்டி, மண் சுமந்து, விவசாயம் செய்து, இளமைக் காலத்தில் இவர் பட்ட துன்பம் ஏராளம்.
இல்லறம் மேற்கொண்டு இல்லற ஞானியாக வாழ்ந்து காட்டியவர். 02.01.1986 ஆம் வருடம்
முழுமையை அடைகிறார். மனிதர்களால் அறிய முடியாத இந்த மாயபிறவியை பறவைகள்
அடையாளம் கண்டு வணங்கியது விந்தை. எழுத்தறிவு படிப்பறிவு இல்லாத இவரிடம் கவி, புலமை,
தத்துவம், கரைபுரண்டு ஓடியது . இனான்ய மொழியில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி
வேதத்தை உலகுக்கு தந்த வள்ளல். “உழைப்பே ஆன்மீகம்”, “தாய் தந்தையரை வணங்கு”,
“தரையை வணங்கு”, “நீரை வணங்கு”, “பிறருக்கு உதவ நினை”, “கடமை செய் கலகம் செய்யாதே'
என்று மனித வாழ்க்கைக்கு தேவையானவற்றை எளிய அறிவுரைகள் மூலம் பெரிய தத்துவம்
சொன்னவர் இவர் தீர்க்க தரிசனங்களில் சில:-
(1) அரச கோலங்கள் எல்லாம் அலங்கோலமாகும்,
(2) உழவனும் மீனவனும் நாடாளுவான்,
(3) பறக்கும் தட்டில் பல கோடி பேர் உலாவி
வருவார்கள்,
(4) இடி, மின்னல், புயல், பூகம்பத்தால் பேரழிவு ஏற்படும்
என கூறிய தீர்க்கதரிசி.
26.12.2000ஆம் ஆண்டு இவர் சமாதி அடைந்த நாளாகும். வாழ்கிற காலத்தில் தன்னை
நம்பிக்கையுடன் நாடி வந்த அனைவரின் துயரத்தையும், தன் தெய்வீக ஆற்றலால், போக்கியவர்
இன்று சமாதியிலிருந்து தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கிறார்.
இவரது சமாதி, சென்னை, மேடவாக்கத்தில் “யாகவா பிரம்மஸ்தலம்” என்ற பெயரில்
அமைந்துள்ளது. யாகவா முனிவரது அறிவுரைகள், தத்துவங்கள், வேதங்கள், ஒலி நாடாக்களின்
தொகுப்பு, ஆன்மீக கருத்துகள், புத்தகங்களை, உலக மக்கள் யாவரும் பயனடையும் பொருட்டு
இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. யாவும் யாகவா முனிவரது மலரடிகளுக்கு சமர்ப்பணம்,
யாகவா சரணம்.